உதகையில் சட்ட விதிகளை மீறி தனியார் பங்களிப்புடன் சாகச பொழுதுபோக்கு மையத்தை கட்டி வருகிறது விடியா அரசு. இயற்கையை சீரழித்து பொழுதுபோக்கு மையம் அமைப்பது அவசியமா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
இந்தியாவின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாக நீலகிரி உயிர் சூழல் மண்டலம் உள்ளது. 67 சதவீத வனப் பகுதி கொண்ட இந்த மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு வனம், வேளாண்மை மற்றும் சுரங்கம் ஆகிய மூன்று துறைகளுக்கு மனு அளித்து தடை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். இத்துறைகளின் பரிந்துரையின் பிறகு தான் மாவட்ட குழு ஒப்புதல் அளிக்கும். அதே போல வணிக ரீதியான கட்டிடங்களை கட்ட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் விடியா திமுக அரசு, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், உதகையின் அடையாளமாக திகழும் பிரசித்தி பெற்ற படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சாகச பொழுது போக்கு சுற்றுலா அறிமுகம் செய்வதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி உள்ளது.
இதற்காக உதகை படகு இல்லத்தை சுற்றிலும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்ட பைன் மரங்கள் மற்றும் அறிய வகை மரங்கள் என நூற்றுக்கணக்கான மரங்கள் அத்துமீறி வெட்டபட்டுள்ளன. இதற்காக சுற்றுச்சூழல் துறை, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளில் முறையாக எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இயற்கை வளங்களை அழித்து இரவு, பகலாக ராட்சத எந்திரங்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கு விடியா திமுக அரசின் சுற்றுலா துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் உடந்தையாக இருப்பதாகவும், அவருடன் சுற்றுலா துறை உயர் அதிகாரிகளும் இணைந்து பெருந்தொகையை பெற்று கொண்டு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை செய்ய அனுமதித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் முக்கிய அங்கமான நீலகிரியில் ஒரு மரத்தை வெட்டுவதற்கு கூட கடும் கட்டுபாடு உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று சூழல் நிர்வாகம் அனுமதி எப்படி வழங்கப்பட்டது? என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உதகை படகு இல்லத்தை சுற்றி 150 மீட்டர் தூரத்திற்கு எந்த வித கட்டுமான பணிகளை செய்ய கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், படகு இல்லத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்று வரும் விதி மீறிய கட்டுமான பணியால் இயற்கை வளங்கள் வீணாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சாகச பொழுதுபோக்கு மையத்துக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post