விடியா ஆட்சியில், உதகையில், இடிந்து விழும் நிலையிலான கட்டிடங்களுடன், பராமரிப்பின்றி இயங்கிவரும் அங்கன்வாடியுடன் கூடிய நகராட்சி நடுநிலைப்பள்ளியின் அவலம் குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
பராமரிப்பு இன்றி இருக்கும் அங்கன்வாடி..!
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு தலையாட்டி மந்து பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அங்கன்வாடியுடன் கூடிய நடுநிலைப் பள்ளியாக இது தரம் உயர்த்தப்பட்டது. இதனால் LKG மற்றும் UKG வகுப்புகளும் தொடங்கப்பட்டன. பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியுடன் பள்ளியில் சேர்த்தனர்.
ஆனால் என்று விடியா ஆட்சி அமைந்ததோ அன்று தொடங்கி பெற்றோரின் மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போய் இப்போது அச்சம் மேலிடத் தொடங்கி உள்ளது.
அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பும் இன்றி, நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருவதுதான்.
பள்ளி வளாகனத்தினுள் அமைந்துள்ள பாதையில் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வளாகத்தினுள் புகுந்து விடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வெந்நீர் தருவதற்காக அமைக்கப்பட்ட சோலார் வாட்டர் ஹீட்டரும் பழுதாகியுள்ளதால், குழந்தைகள் குளிர்ந்த நீரை பருகுவதால் உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்து இடித்து விழும் நிலையில் உள்ளதால் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படும் முன்னர் அதனை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புனரமைக்குமா விடியா திமுக?
இதனிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில் குப்பை
தொட்டிகளை கொண்டு வைத்துள்ளதால், அங்கு புதர்கள் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பள்ளியை சீரமைக்கக் கோரி பலமுறை 33-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா, நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியே வருகிறது. ஆகவே உதகை நகராட்சி ஆணையாளர் நேரில் பள்ளியை பார்வையிட்டு, கழிவு நீர் பாதை, குடிநீர் மற்றும் சமையல் அறைகளை புனரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.