விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கான தடை அமல்படுத்தப்படாததால் உயிரிழப்புகள் தொடரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மேலும் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் அருகே ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து சொல்கிறது இந்தக் கட்டுரை.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால், ஏற்பட்ட கடன் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள 42வயது ரவிசங்கர் இவர்தான். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராகப் பணி செய்து வந்த ரவிசங்கர், துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவில் 6வயது மகன் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
விடியா ஆட்சியால் தடை செய்யப்படாத ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில், அளவுக்கு அதிகமாக கடனாளி ஆகியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
சனிக்கிழமை காலை வழக்கம்போல் அறையில் படுத்திருந்த கணவரை மனைவி எழுப்பியுள்ளார். ஆனால் அசைவற்று அவர் கிடந்தததால் பதறியவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரவிசங்கர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும், தொடர்ந்து ரம்மி விளையாட முடியாமலும் தடுமாறிய நிலையிலும் ரவிசங்கர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. கணவரின் உயிரிழப்பு குறித்து மனைவி ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post