திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவர். ஆனால் இங்கு தொண்ணூறுகளின் குழந்தைகள் தங்களுக்கு திருமணமே நடக்காதா என்று ஏங்கிப் போய் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் மணமகள் ஒருவருகூகு ஜோத்பூரில் ஆன்லைன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த செய்திதான் இந்தியாவையே கலக்கி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே கசப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண்ணான அமீனா இந்தியாவுக்கு வருவதற்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆன்லைன் திருமணத்தை இரு வீட்டார்களும் கூடிப்பேசி முடித்துவைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் அர்பாஸ் கான். ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவினர்களில் பலர் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டு அங்கு வசித்து வருகின்றனர்.
இவர்கள் கராச்சியைச் சேர்ந்த அமினா என்ற பெண்ணை அர்பாச் கானுக்கு மணமுடிக்க திட்டமிட்டிருந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இதில் சம்மதம் என்றானபின், அர்பாஸ் கானிற்கும் அமினாவிற்கும் ஜோத்பூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. மணப்பெண் அமினாவிற்கு இந்தியா வருவதற்கான விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சமீபத்தில் அர்பாஸ் கானின் குடும்பத்தினர், சுற்றத்தார், நண்பர்கள் அனைவரும் ஜோத்பூரில் கூடினர். அதேபொல அமீனாவின் குடும்பத்தினர் கராச்சியில் பங்கேற்றனர். ஜோத்பூர் ஹாஜி, இசுலாமிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். விரைவில் தன் இணையர் அமினா விசா கிடைத்து ஜோத்பூர் வருவார் என்று அர்பாஸ் கான் வழிமீது விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.