ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர்கள் சூரிய பிரகாசம், வினோத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளில் மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், இணைய விளையாட்டுகளை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இரவில் பெற்றோர் உறங்கச் சென்ற பிறகு ஆன்லைனில் விளையாடத் தொடங்கும் குழந்தைகள், விடிய விடிய விளையாடி, அதற்கு அடிமையாவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கில், விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.