மனிதர்களை பொறுத்தவரை உடல் ரீதியாக வலுவாக இருந்தால் மட்டும் போதாது. மன ரீதியாகவும் திடமானவராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள இவ்வுலகம், இயந்திரமயமாகவும் வேகமாகவும் கால சுழற்சிக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்திய அளவில் பத்தில் ஒரு நபருக்கு மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்ற, விரக்தி மற்றூம் மன ரீதியிலான பாதிப்பு உள்ளது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரான நீதிபதி அருண்குமார் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
மன நலம் பாதிப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கு, புது டெல்லியில் நேற்றைக்கு நடந்தது. இதில் தான் நீதிபதி அருண்குமார் மிஸ்ரா இது குறித்து பேசியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 47 மன நல மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி வரை ஆய்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைகளில் நேரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நேற்றைக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி இந்தியா முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மன நோயாளிகள் முழுமையாக குணமடைந்தும், மருத்துவமனைகளிலேயே இருக்கின்றனர். இவர்கள் குணம் அடைந்தபின் ஒருநாள் கூட மருத்துவமனைகளில் குடுதலாக தங்கக் கூடாது. இருந்தும் இவர்கள் மருத்துவமனையில் சுற்றி திரிகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் சரியான வசதி இல்லை, சுகாதாரம் பேணப்படுவதில்லை, டாக்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் இருப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மன நோயில் இருந்து மீண்டவர்களை மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ப்பதற்கான முயற்சியும் நடக்கவில்லை. இதில் மநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட மனநல மருத்துவ சட்டத்தின்கீழ், மாநில மருத்துவ சேவை ஆணையங்கள் உள்ளிட்டவை, பெரும்பாலான மாநிலங்களில் அமைக்கப்படவில்லை.
தற்போதைய காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் பலவித சவால்களை சந்திக்கிறோம். இது ஒரு இயந்திர யுகம். சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு கூட தயங்குகிறோம். சுயம் என்கிற பெயரில் நாம் ஒவ்வொருவரும் சுயநலமிக்க மனிதர்களாக மாறிப் போய் இருக்கிறோம். மேலும் புறச்சூழலும் மக்களின் மனநிலையைப் பாதிக்கிறது. மன அழுத்தம், பற்றம், மனச்சோர்வு, விரக்தி போன்ற மன பாதிப்புகள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது. 10-ல் ஒருவருக்கு ஏதாவது ஒருவகையில் மன ரீதியிலான பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 13000 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். அனைத்துத் துறையிலும் வேலை செய்பவர்களுக்கு இந்த மன அழுத்தமானது தொற்றியுள்ளது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.