தமிழ் மக்களுக்கு எப்படி பொங்கல் சிறப்பு வாய்ந்ததோ, அதுப்போலவே மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஓணம் பண்டிகை விளங்குகிறது. அப்படிப்பட்ட ஓணம் பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் கேரள வாசிகள்..? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேரளா என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருவது சுற்றுலா தளம், செண்டை மேளம், கதகளி நடனம், மம்முட்டி – மோகன்லால் திரைப்படம், சபரிமலை, குருவாயூர் போன்ற கோவில்கள், அடுத்து மிக முக்கியமானது கேரள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள். அதுவும் ஓணம் பண்டிகையை 10 நாட்கள் கொண்டாடி அதகளபடுத்துவார்கள் கேரள வாசிகள்.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரைப் பாதாள உலகிற்கு தள்ளினார் கடவுள் என்ற ஒரு கதை உண்டு. திருவோணத் திருநாள் அன்று மகாபலி தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள்
இதனைமுன்னிட்டு விழா நாளன்று சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். “கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழி அங்கே பிரபல்யம். 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு தடபுடலாக கொண்டாட்டத்தை துவங்குவார்கள்.
இத்திருவிழாவின் போது அனைத்து பகுதிகளிலும் வித்தியாசமான, அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும். முகமூடி அணிந்து கும்மாட்டி நடனக் கலைஞர்கள் தெருக்களில் வந்து மக்களை மகிழ்விப்பார்கள். அடுத்து படகு பந்தயம். பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும் இந்த படகு போட்டியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் கேரள கலாச்சார உடையணிந்து பெரும்திரளாக பார்க்க அணிவகுப்பார்கள்.
ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பம்சம், ‘புலிக்களி’ என்று அழைக்கப்படும் நடனம். இந்த விழா, திருச்சூரில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. வயிற்றை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த விழாவில் செம டிமாண்ட். கறுப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணம் பூசி, இசை தாளத்துக்கு தகுந்த படி புலி வேடமிட்டு ஆடுவர்.
ஆதே சமயம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனத்தை ‘கைகொட்டுக்களி என்று சொல்வார்கள்.’ வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி அவர்கள் ஆடுவது, அனைவரையும் கவர்ந்து, அவர்களிடத்தில் மட்டுமே கவனம் பெற செய்யும். அதுபோல பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ”தும்பி துள்ளல்” எனும் நடனமும் வழக்கம். தாளத்துடன் கோரசாக பெண்கள் பாடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க செய்யும்.
ஓணம் பண்டிகையின் உச்சக்கட்டமாக தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழா. 10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளை விலையுயர்ந்த கவசங்களாலும் அத்தப்பூ தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.
மொத்தத்தில் ஏழை, பணக்காரன் பார்க்காமல், சாதி,மதம் கருதாமல் ஒன்றுகூடி கொண்டாடும் ஒரு விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது என்று சங்ககால வரலாற்று ஏடுகள் சொல்கின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் தமிழகத்தில் வாழும் கேரள மக்களோடு சேர்ந்து இப்போதும் ஓணம் பண்டிகையைத் தமிழக மக்களும் கொண்டாடுகிறார்கள்.