மூதாட்டிகளை குறிவைத்து தொடர் செயின்பறிப்பு! விடியா அரசில் முதியவர்களுக்கும் ஆபத்து!

மூதாட்டிகளை குறிவைத்து தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நபர், போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.

கும்பகோணம் சபரி நகர் வழியாக, கலாவதி என்னும் 75வயது மூதாட்டி கடந்த 26ஆம் தேதி காலை நடந்து சென்று கொண்டிருந்த போது மின்னல் வேகத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர், மூதாட்டி அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த செயின்பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

மர்ம நபர் செயினை இழுத்ததால் கீழே விழுந்து எழுந்த மூதாட்டி, பின்னர் உறவினர்களோடு சென்று கும்பகோணம் கிழக்கு காவல்நிலையில் வழிப்பறி குறித்து புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியும் இருந்த அனைத்து சிசிடிவிக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் தனது இருசக்கரவாகனத்தில், கும்பகோணம் பாலக்கரை, பெரும்பாண்டி, அசூர், ஆகிய இடங்களை தாண்டி செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள், பெரும்பாண்டி KVN நகரில் குடியிருந்த மர்மநபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது.

விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது இவர் என உறுதியானது.
பின்னர் கடந்த 26 ஆம் தேதி சபரி நகரில் கலாவதி என்ற மூதாட்டியிடம் இருந்து
பறிக்கப்பட்ட தாலி சங்கிலி மீட்கப்பட்டது .

முதியோர்களை குறிவைத்து இருசக்கரவாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபடும் வெற்றிவேல் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் மூன்று வழிப்பறி வழக்குகள், இரண்டு திருட்டு வழக்குகள், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஏழு திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வெற்றிவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

– செய்தியாளர் நாடிமுத்து மற்றும் ஆசாத்.

Exit mobile version