மானாமதுரை அருகே ஒடிசாவைச் சேர்ந்த கைம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள், சிறுவன் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல் சூளை பெண் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம் குறித்து காண்போம்…
2 குழந்தைகளின் தாயான கணவரை இழந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் அருகே செங்கல் காளவாசல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கணவர் சாலை விபத்தில் 4 வருடங்களுக்கு முன்பு இறந்ததை தொடர்ந்து, மனைவி மட்டும் தனது இரு குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்து செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்தார்.
இதில், அதே செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்த கீழப்பாசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கும், ஒடிசா கைம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு குடிபோதையில், ஆதியின் நண்பர்களான தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களும், ஒரு சிறுவனும் சேர்ந்து ஒடிசா பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளனர்.
தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து, ஒடிசா பெண் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கீழமேல்குடி தெக்கூரை சேர்ந்த அவர்களை தேடி வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார், ஆதித்யா
மற்றும் ஒரு சிறுவன என ஐந்து பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களில் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற நால்வரையும் சிறையிலும் அடைத்தனர். செங்கல் காளவாயில் தங்கியிருந்த ஓடிசா பெண்ணை, இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், செங்கல் காளவாயிலில் வேலை பார்க்கும் மற்ற பெண்களிடையே அதிர்ச்சியையும், அந்தப் பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.