ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்க 4 லோக்கோ பைலட்டுகள் உட்பட 55 ரயில்வே ஊழியர்களுக்கு தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூரில் கடந்த இரண்டாம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனை அடுத்து கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் பெட்டியின் மீது பெங்களூரில் இருந்து ஹௌரா நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியது. இதில் இதுவரை 278-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ எம் சௌத்ரி விசாரணையை தொடங்கியுள்ளார். இதில் ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் அதிவிரைவு ரயிலை இயக்கிய லோகோ பைலட் ஜி என் மோகன் டி, உதவி லோகோ பைலட் ஹசாரி பெஹேரா மற்றும், பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் இயக்கிய லோகோ பைலட் சித்தரஞ்சன், உதவி பைலட் சுதிர் குமார் உள்ளிட்ட 55 பணியாளர்களுக்கு தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரயில் விபத்து குறித்து நேற்று விசாரணை தொடங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் பல ரயில்வே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்தி வருகிறது. ரயில் விபத்துக்கு சிக்னல் தவறாக அளித்ததே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இதற்கான காரணம் என்னவென்று அறிய 55 ரயில்வே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தென்கிழக்கு பிராந்தி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.