சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் விராட்கோலி எட்டாவது இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத விராட்கோலி கடந்த 2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தனது ரன் கணக்கைத் துவங்க ஆரம்பித்தார். இதற்கு பிறகு ஒருநாள் போட்டித் தொடருக்காக பங்களாதேஷ் சென்றிருந்தபோது மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய 44வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதற்கிடையில் இந்தியா வந்திருந்த இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியிலும் மூன்றாம் ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்து சதமடித்தார் கோலி. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 46 சதங்களும் மொத்தமாக 74 சதங்களும் அடித்து சாதனை புரிந்துள்ளார். பழைய ஃபார்மிற்கு கோலி திரும்பியுள்ளதால், ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் அவர் முன்னேறி உள்ளார். அதேபோல இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒருநாள் போட்டியின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.