வினோதமான நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் பல்வேறு அராஜகங்களை அரங்கேற்றி வருகிறார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது அங்கு மேலும் ஒரு மனித உரிமை மீறல் நடந்துள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்.
விநோதமான நாடு வடகொரியா ஏன்?
உலகின் வினோதமான நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு இரும்புத்திரை போர்த்தி அந்நாட்டில் மக்கள் கற்பனையில் கூட எதிர்பார்க்காத அளவில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறார் அதிபர் கிம் ஜாங் உன். அவரின் கண் பார்வையில் இருந்து ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு அங்கு பல்வேறு கடுமையான விதிகளும், தண்டனைகளும் அமலில் உள்ளன.
சமூக வலைதளங்களுக்கு தடை, வெளிநாட்டு படங்களை பார்த்தாலோ அல்லது வெளிநாட்டு இசையை கேட்டு ரசித்தாலோ சிறை தண்டனை, வெளிநாட்டில் இருப்போரை போன் வாயிலாக தொடர்பு கொண்டால் சுட்டு கொல்லும் தண்டனை, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் மரண தண்டனை, ஆண், பெண் அனைவருக்கும் சிகை அலங்கார கட்டுப்பாடு. ஆனால் அதிபருக்கு மட்டும் விதிவிலக்கு, தலைநகரில் செல்வந்தர்கள் மட்டுமே வசிக்க வேண்டும், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளுக்கு தடை, கட்டாய ராணுவ சேவை, இரவு நேர மின் தடை என சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று, தன் தந்தையின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் விதமான அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கும் தடை விதித்திருந்தார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனையா?
இப்படி தனது அதிரடி நடவடிக்கைகள் மட்டும் இன்றி வினோதமான உத்தரவுகளுக்கும் உலக அளவில் கிம் ஜாங் உன் பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்குக் கூட மிகக் கொடூர தண்டனை வடகொரியாவில் கொடுக்கப்படுகிறது. உலக அளவில் பரவலாக அறியப்பட்டு இருந்தாலும் வடகொரிய நாட்டில் நடைபெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய கருத்தடை, உயரம் குறைவான பெண்களுக்கு கட்டாய கருத்தடை. மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக வீட்டில் நடனமாடிய கர்ப்பிணி பெண் வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் இல் சங்-இன் படத்தை குறிப்பிட்டு காட்டியதால் மரண தண்டனையும், தென் கொரிய வீடியோக்களை பார்த்ததற்காக சிறுவனுக்கு மரண தண்டனையும் விதித்து கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.