முழு ஊரடங்கு அமலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கின்போது சில சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் வழங்கப்பட்டதை போன்று சில சேவைகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு அமலில் இருக்கும் 12 நாட்களும், தொழிலாளர்கள் நாள்தோறும் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுவிநியோகக் கடைகள் இயங்காது என்றும், வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 20ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 22ம் தேதி காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு கடுமையான பின்பற்றப்படும் என்றும், 27ம் தேதி நள்ளிரவு முதல் 29ம் தேதி காலை 6 மணி வரையிலும் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இருநாட்களும் பால் விநியோகம், மருத்துவம் சார்ந்த செயல்பாடுகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post