முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில், ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
போக்குவரத்து துறையின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக சென்னை மற்றும் கரூரில் இருக்கும் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் என 21 இடங்களை குறிவைத்து சோதனையில் இறங்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. காலை 6 மணிக்கு100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவாக பிரிந்து களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த தகவல் காட்டுத்தீயாக பரவ சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களை பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனையடுத்து கரூரில் ஆண்டான் கோயிலில் இருக்கும் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு முன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவியத் தொடங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல அதிமுக தொண்டர்கள் வருகை அதிகரித்தால் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வரும் வழி முழுவதும் தடுப்புகளை அமைத்தது காவல்துறை.
இதேபோல சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் வீட்டில் பரபரப்புடன் சோதனையை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. பல மணி நேரமாக சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்காததால் என்ன செய்வது என்று தவித்த லஞ்ச ஒழிப்பு துறையினர், மேலிடம் கொடுத்த உத்தரவின் படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காரையும் சோதனை நடத்தி தங்களுக்கு வந்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.
கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் செல்வமும் உறுதி படுத்தி இருக்கிறார்.