18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் 18 எம்.எல்.ஏக்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் கடந்த சட்டபேரவை தேர்தலின்போது சம்மந்தப்பட்டவர்களின் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் செலவு செய்யப்பட்ட தொகையினை அந்த 18 பேரிடம் இருந்து வசூல் செய்து, அதனை கஜா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் தேர்தல் ஆணையமும் வரும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
அதேசமயம் இந்த வழக்கை காரணம் காட்டி, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
Discussion about this post