மும்பை ஆரே காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை மெட்ரோ ரயில் பணிக்காக வெட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிலத்தின் வகைப்பாடு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பை ஆரே பால்பண்ணைக் குடியிருப்பு அருகே மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. இதை எதிர்த்துக் கடும் போராட்டம் நடைபெற்ற நிலையில், மரங்களை வெட்டத் தடை விதிக்கக் கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தலையிடக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு மாணவர் அமைப்பினர் கடிதம் எழுதினர். இதையடுத்துத் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, மேற்கொண்டு மரங்களை வெட்டக்கூடாது எனத் தடை விதித்த நீதிபதி, ஆரே காட்டுப்பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின்கீழ் வருகிறதா? இல்லையா? என்பதைத் தகுந்த ஆவணங்களுடன் அக்டோபர் 21 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் சேர்க்க உத்தரவிட்டார்.
மரங்களை வெட்டுவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.
Discussion about this post