தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அதன்படி, என்ஆர்சி நடவடிக்கையின்போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் அல்லது அவர்களின் தாய், தந்தையரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், கல்வியறிவு இல்லாதவர்களிடம் குடியுரிமையை நிரூபிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லையென்றாலும், சாட்சிகளின் அடிப்படையில் அவர்களது குடியுரிமை உறுதி செய்யப்படும் என்றும். இது தொடர்பாக விரிவான விதிமுறைகள் உள்துறை அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.