தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, பீகார், உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள ஒரு சில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற விதிமுறையின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 7-ம் தேதிவரை இடைத்தேர்தல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்களின் நலன் கருதி தற்போதைக்கு தேர்தல் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post