என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
தமிழக அரசு, என்.எல்.சி. பிரமாண மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது எனக் கோரிய வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிரை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது.
1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் என்று என்.எல்.சி. நிறுவனமும் தங்கள் தரப்பு பதிலைக் கூறியுள்ளது.
நிலத்தை கையகப்படுத்திய பின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன் என்றும் நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன் எனவும் என்.எல்.சி.க்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.
அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து விடும் என்று என்.எல்.சி. தரப்பு கூறியது.
அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.