பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா??? என்று NLCக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியினை தெரிவித்துள்ளது.
நிலத்தின் மதிப்பை விட 3 மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலம். தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்க்கின்றனர் என்று என்.எல்.சி சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி எம்.தண்டபாணி வேதனை தெரிவித்தார். வாடிய பயிரைப் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார். நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத் தான் போகிறோம். நிலக்கரி பயன்படாது. என்.எல்.சி. கோபித்து கொண்டாலும் பரவாயில்லை, இதுதான் என் கருத்து என்று தன்னுடைய கருத்தினை தெரிவித்தார். பூமியைத் தோண்டி தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது என்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கை வைத்தால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய பருவ மழை சுத்தமாக நின்றுவிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். ஒரு ஏக்கர் நிலத்தை வைத்தே மகாராஜா போல் வாழ்ந்த ஒரு விவசாயி, பல மடங்கு பணம் கொடுத்தாலும் மற்றவர்களிடம் வேலைபார்க்க மனமில்லாமல், வெளியூர்களுக்கு சென்றுவிடுகிறார் என்றும் அவர் வேதனை பொங்க தெரிவித்தார்.