நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார், அக்சய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் கடைசி நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரே வழக்கு ஒரே தண்டனை என்பதால் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் தங்களுக்கான சட்ட வழிமுறைகளை ஒரு வாரம் வரை அணுகலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post