தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருத்தணி, கடலூர், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 6 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக்கழகம், தரமணி, செம்பரம்பாக்கம், மதுராந்தகத்தில் 4 சென்டி மீட்டரும், வடசென்னை, கேளம்பாக்கம், காரைக்கால், வந்தவாசியில் 3 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகி உள்ளது.