தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்படவுமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக என்னும் மாபெரும் பேரியக்கத்தை தொடங்கியதாகக் கூறியுள்ளனர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அதே எண்ணத்தோடு இயக்கத்தையும், தமிழ்நாட்டையும் வழி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் தற்போது அதிமுக பயணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சனைகள் பல இருக்கின்றபோது அதைப்பற்றியெல்லாம் ஊடக நிறுவனங்கள் சிறிதளவும் கவலைப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளவர்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இத்தகைய காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். அதிமுக-வை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதிமுகவின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். அதே போல் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை விரிவாக கேட்டு தெரிந்துகொள்ள
↕↕↕
Discussion about this post