அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்க இருப்பதாக திமுக அரசு தெரிவித்துள்ளது, போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முன்னோட்டமா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
விடியா திமுக ஆட்சியில் அதன் அமைச்சர்களின் நடவடிக்கைகளால் திமுக தலைவரின் தூக்கம் கெடுகிறதோ இல்லையோ, விடியா அரசு ஒவ்வொரு நாளும் கொண்டு வரும் வில்லங்கங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தையே ஏற்படுத்தி அவர்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஓட்டுநர் நியமன விவகாரமும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக, போக்குவரத்து கழக பணிமனைகளில் டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிமனை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுநர்களை பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் செய்து பணிகளுக்காகவும், கூடுதலாக பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கும் வகையிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, திருச்சி, நாகை, கும்பகோணம், மதுரை, கோவை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவும், மேலும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 பணிமனைகளில் பணிசெய்யவும் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓசூர், தூத்துக்குடி வழித்தடங்களிலும் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்தவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்த ஓட்டுநர்கள் ஓராண்டுக்கு பணியில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதாகச் சொல்லிவிட்டு தற்போது ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது என்பது ஆட்சியாளர்கள் கல்லாகட்டுவதற்கே அடித்தளம் அமைப்பதாக தொழிற்சங்கத்தினர் குமுறுகின்றனர். அதேபோல, ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிப்பது, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த டெண்டர் கொடுப்பது என இவற்றை பார்க்கும்போது விரைவில் தனியார் நிறுவனங்களின் கைகளில் தமிழக அரசு போக்குவரத்துதுறை செல்லும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர் அவர்கள்.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் நலனில் துளியும் அக்கறையின்றி ஓட்டுநர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வது என்பது அரசு போக்குவரத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதன் முன்னோட்டம் தான் என்று உறுதிபட தெரிவிக்கும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதுபோன்ற ஒருநிலை ஏற்பட்டால் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.