பொன்விளையும் காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மத்திய அரசுக்கு அஞ்சி, சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது திமுக. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கும்பகர்ணன்போல தூங்குகிறதா திமுக அரசு? என்று அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
பொன்விளையும் பூமி… தமிழகத்தின் நெற்களஞ்சியம்.. காவிரித்தாயின் சுரப்பு மடி… இதுதான் காவிரி டெல்டா… அப்படிப்பட்ட உணர்வுப்பூர்வமான இடத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட வழிவிட்டுவிட்டு, கைகட்டி வாய் பொத்தி நின்றுகொண்டிருக்கிறது திராணியில்லாத திமுக அரசு… உடனே, இது மத்திய அரசின் விவகாரம் என்று டெல்லியைக் கைகாட்டிவிட்டு, தப்பிக்கப்பார்க்கும் திமுகவை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி.
2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுந்தபோதே மத்திய அமைச்சர் இந்த விஷயத்தை சொல்லியிருந்தார். மத்திய அரசு சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தைப் பற்றி சட்டமன்றத்தில் பேசி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் ஏதாவது பேசினார்களா? இங்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ள திமுக கூட்டணி எம்பிக்கள் 39 பேர் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தார்களா? என்று காட்டமாக கேள்வியை எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர்.. ஆம், அவர் கேட்பதும் நியாயம் தானே?
நம் முதல்வர் ஸ்டாலினிடம் இதைப்பற்றிக் கேட்டால், அட, நானும் டெல்டாகாரன் தாங்க என்று பேசி மழுப்புகிறார்.. நீங்கள் டெல்டாகாரர்தானே? அப்படியென்றால், 2006-11 காலகட்டத்தில்தான் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது இருந்தது திமுக அரசுதானே? ஸ்டாலின் தானே துணை முதல்வராக இருந்தார்? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரா ஸ்டாலின்?
ஆனால், அதிமுகவோ, விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. காவிரி விவகாரத்தில் 22 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி, நியாயமான உரிமைகளை நிலைநாட்டியதே அதிமுக, அதைப்பார்த்தாவது திமுக திருந்தியிருக்க வேண்டாமா? என்ற கேள்விகள் எழுவது நியாயம் தானே? இப்படிப்பட்ட நியாயமான கேள்விகளை எழுப்பினால், திமுகவிடம் பதில் இருக்காதே… ஆனால், மத்திய அரசுக்கு அடிபணிந்திருப்பது யார்? அஞ்சி நடுங்குவது யார் என்று இப்போது புரியும் பொதுமக்களுக்கு.