மீண்டும் தமிழகத்தில் தலையெடுத்துள்ள கொரோனா தொற்றுக்கு தூத்துக்குடியில் ஒருவர் பலியாகி உள்ளார். கடந்த 2021 ம் ஆண்டைப்போலவே கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், மக்களை துயருக்கு ஆளாக்கப் போகிறதா விடியா திமுக என்பது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா அரக்கன் மீண்டும் தமிழகத்தில் தன் கோரமுகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறான். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றின்போது, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி திறம்பட கையாண்டு பொதுமக்களை, பாதுகாத்து நின்றதால், பிற மாநிலங்களை விட தமிழகம் தப்பித்தது என்றே சொல்லலாம். முதலமைச்சரோடு சேர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் சி.விஜயபாஸ்கரும் திறம்பட செயலாற்றியதன் விளைவாகவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.
அதுமட்டுமின்றி பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யவும், மக்களுக்கு உதவித்தொகையாக ரூ.2500 வழங்குவதிலும் அதிமுக அரசின் செயல்பாடு அனைவரும் பாராட்டும் வகையிலே இருந்தது. ஆனால், 2021 ஆட்சி மாற்றத்தில், விடியா ஆட்சியின் நிர்வாகத்திறமையின்மையால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் கொரோனா தொற்றால் உயிர்பலிகள் அதிகரித்தது. சரியான திட்டமிடல் இல்லாத பொதுமுடக்கத்தால், தொழில்கள் முடங்கியதோடு, மக்களின் வாழ்வாதாரமும் நசிந்து போனது இன்னமும் ஆறாத வடுவாகவே உள்ளது.
தற்போதுதான் அந்த வாழ்வாதார பாதிப்புகளில் இருந்து மக்களாகவே சுயமாக தங்களை மீட்டெடுத்து வரும் நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் இப்போதும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விடியா திமுக முறையாக கையாளததால், கொரோனா தொற்று காரணமாக தூத்துக்குடியில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்தே, நிலையில் சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தொற்று தடுப்புக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் திமுக அரசும் அதன் சுகாதாரத்துறை அமைச்சரும் உடனடியாக தொற்றுப் பரவலை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பார்களா? இல்லை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வைத்து தொழில்களை முடக்கி மக்களை வாட்டப்போகிறார்களா என்கின்ற அச்சம் மக்களிடம் பரவி இருக்கிறது.
பொதுமக்கள் தங்களின் உயிரை பாதுகாக்க முகக்கவசம் அணிய வேண்டும் என்பது முதற்கட்ட பாதுகாப்பு என்றாலும், கொரோனா தொற்று பரவலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்த விடியா திமுக அரசு என்பதே மக்களின் அச்சமாக உள்ளது.