இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. மாணவர்களின் தரவுகளை தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஊழல் செய்கிறாரா..!

அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் விற்பனைக்கு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்தும், தரவுகளை தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஊழல் செய்கிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பது வழக்கம். அப்படி சேகரிக்கும் விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் சேகரித்து பதிவேற்றப்படுகிறது. இந்த தரவுகளைத்தான், பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த நபர்கள் இடைத்தரகர்களுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களை 10ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் வழங்கினால், அளிக்கத் தயாராக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவச் செல்வங்களின் தரவுகளை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விற்பவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டியது அரசின் கடமை என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

அதே நேரம், பள்ளிக்கல்வித்துறை தரப்பிலோ ஆர அமர காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி வெறும் கடணத்தை மட்டுமே தெரிவித்து சாதாரணமாக இந்த நிகழ்வை கடந்துள்ளது. அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ கண்ணை நம்பாதே என்று வாரிசு அமைச்சரின் படத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு அலைகிறார்.

இப்படி மாணவர்களின் தரவுகள் விற்கப்படுவதால் யாருக்கு லாபம் என்று பார்த்தால், பெரும்பாலும் கல்வி நிறுவனங்களை வைத்திருக்கும் ஆளும் திமுக அரசின் நிர்வாகிகள், அமைச்சர்களுக்குத்தான் என்னும் என்ற ஐயம் பெற்றோர்கள் மத்தியில் எழாமல் இல்லை!

இனியாவது மாணவர்களின் சுய விவரங்களை திருடியவர்களையும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். வழக்கம்போல் இதையும் முதல்வர் கண்டும் காணாமல் இருந்தால் அது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுவதாகும் என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் பெற்றோர்களும், கல்வியாளர்களும்.

 

Exit mobile version