இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எதற்கெடுத்தாலும் உதயநிதியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் திமுக!

அறிவாலயம் முழுக்க அங்கே, இங்கே, எங்கேயும் உதயநிதி புராணம் தான்… கட்சியினர் மத்தியிலும் உதயநிதிதான்… ஆட்சியின் அதிகாரிகள் மத்தியிலும் உதயநிதிதான்.. எங்கும் உதயநிதி எதிலும் உதயநிதி… தூணிலும் உதயநிதி, துரும்பிலும் உதயநிதி …
இது ஒன்றும் வாரிசு அமைச்சருக்காக உபிக்கள் மாங்கு மாங்கென்று எழுதிய வரவேற்பு பாடல் அல்ல… திமுகவில் உதயநிதியின் நிலை தற்போது இதுதான்… எங்கெங்கு காணினும் உதயநிதியடா அதுதான் எங்கள் தலைவிதியடா என்று திமுகவின் உயர்மட்டநிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை உள்ளுக்குள் இப்படித்தான் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியலுக்கு வந்த உடனே எம்எல்ஏ, எம்எல்ஏ ஆனவுடனே சட்டமன்றத்தில் முதல்வருக்கு பின்னால் இருக்கை… முதல்வருக்கு வணக்கம் வைத்தகையோடு உதயநிதிக்கும் சலாம் போட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளுக்குக்கூட உத்தரவு… ஒடிசாவில் விபத்து என்றால் ஆறுதல் சொல்லப் போவார்.. ஊர் ஊராக சம்பந்தமே இல்லாமல் ஆய்வுக்கு போவார், பிரதமரைப் பார்க்கப்போவார் … பேச்சு வார்த்தை நடத்தி வருவார்.. சம்பந்தம் இல்லாத துறையில் பிரச்சனை என்றால் மூக்கை நுழைப்பார். எதிர்த்துக் கேள்விகேட்டால் கேட்டவர் மூக்கை உடைப்பார்… அப்பப்பா .. எல்லாம் அவர் அப்பா இருக்கும் தைரியம் ப்பா..

திமுகவில் தனக்கு அடுத்த இடத்தில் தன் மகன் தான் எல்லாமே என்று இப்போதே கட்சிக்காரர்களின் நெஞ்சங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை, இல்லை இல்லை விஷயத்தை ஊற்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்… திமுகவுல குடும்ப வாரிசு வர்றதெல்லாம் ஒரு பிரச்சனையா பாஸ்? என்று கூட நீங்கள் கேட்கலாம்.. நியாயம்தான்… வாரிசு அரசியல் செய்யும் கட்சியில் இதெல்லாம் சாதாரணம் தான்.. ஆனால், இவர்களுக்காக தெருத்தெருவாகச் சென்று போஸ்டர் ஒட்டும் கடைக்கோடித் தொண்டனின் நிலைமை? அதுதான் இங்கே பேசுபொருளே…

இப்போது கூட, உதயநிதி பேச்சுக்கு இந்தியா முழுக்க எழுந்திருக்கும் கண்டனக் குரலுக்கு பின்னாலும் ஓர் அரசியல் திட்டம் வைத்திருக்கிறது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. நெகடிவ் பப்ளிசிட்டியாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் தன் மகன் பெயர் சென்றடைய வேண்டும் என்று திட்டம்போட்டு இப்படி சர்ச்சைப்பேச்சை பேச வைத்து அதற்கு அறிக்கை கொடுப்பதுபோல அறிக்கை கொடுத்து பூஸ்ட்டப் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… அடேங்கப்பா… பலே கில்லாடிகள் தான் இந்த திமுகவினர் ….

ஆக, கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதியை கொண்டுவர முயற்சிப்பது ஸ்டாலினா?அல்லது அவர் குடும்பத்தினரா? வெகு சிக்கிரமே உதயநிதியை அமைச்சராக்கிய ஸ்டாலின் அடுத்து அவரை துணை முதல்வர் ஆக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாரா?அப்படி ஒருவேளை உதயநிதி துணை முதல்வரானால், கட்சிக்குள் போர்க்கொடி தூக்கப்போவது யார்?வெடிக்கப்போகும் பூகம்பம் எத்தகையானதாக இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப்பார்த்தால் உண்மையாலுமே ஸ்டாலினுக்கு தூக்கம் வராதுதான்.

 

 

Exit mobile version