விடியா ஆட்சியில் தமிழகம் வன்முறைக் களமாகி ரத்த ஆறு ஓடுவதை தினமும் அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துள்ளத்துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடல்களில் இருந்து வெளியேறிய குருதியும் அதையே பறைசாற்றி உள்ளது.
பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தம்பி மோகன், தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் என 4 பேர் வெட்டி சாய்க்கப்பட்டது தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரிடம் ஓட்டுநராக வேலை செய்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
வெங்கடேசனின் கூட்டாளி செல்லமுத்துவை கைது செய்த போலீசார் வெங்கடேசன் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.
பணத்தை கையாடல் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட வெங்கடேசன், செந்தில்குமாரின் வீட்டு முன்பு அமர்ந்து நண்பர்களோடு மது அருந்தியுள்ளார். இதனை தட்டிக் கேட்டபோதுதான் இந்த படுகொலைகள் அரங்கேறி இருக்கின்றன.
சிவகாசி அருகே மதுபோதையில் இருந்த இளைஞர் ஈஸ்வர பாண்டியை, அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் உள்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது
சென்னை கோயம்பேட்டில் மதுபோதையில், மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்
இரு தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக பிரமுகர் பிரபு என்பவரின் தூண்டுதலால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஜெகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்….
இப்படி நித்தமும் கொலை, கொள்ளைகள் என சமூக விரோதச் செயல்கள் அரங்கேற முழுமுதற்காரணமாக இருப்பது மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களுமே.
எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கை மூடச் சொல்லி கருப்புக்கொடி பிடித்த ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த பின்னர் அதனையெல்லாம் கண்டுகொள்ளாததால், மூடப்படாத டாஸ்மாக் அரக்கனால் தமிழகக் குடும்பங்களில் உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் தொடர் கதையாகி வருகிறது.
இதுஒரு பக்கம் என்றால் காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டிருப்பதால் அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் குற்றங்களை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. திருப்பூர் சம்பவம் தொடர்பாக அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்படி தமிழகத்தில் கொலைச்சம்பவங்கள் தொடர் கதையாகும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாட சமூக விரோத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறும் ஸ்டாலினின் நிர்வாகத்திறமையின்மைதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.