இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! 2024 தேர்தலுக்கு தயாராகிவிட்டதா அதிமுக?

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலோ, இந்தியா முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலோ முதல் ஆளாக தேர்தல் கூட்டணி தொடங்கி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சியினரை அலற விடுபவர்தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அவரது வழியில் வெற்றி நடைபோடும் அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமியும், வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகளை என்றோ தொடங்கி விட்டார்.

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பே அதிரடியாக அறிவித்தவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி. வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதிமுகவுக்குத் தான் அந்த தகுதி உள்ளதையும் தனது செயல்பாடுகளின் மூலம் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

ஒன்றரை கோடியாக இருந்த அதிமுக தொண்டர்களின் எண்ணிக்கை இன்று 2கோடியையும் தாண்டி எகிறி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையின் காரணமாக அதிமுக உலக அரசியல் அரங்கில் 7வது மிகப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, மதுரையில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சி மாநாடு அதிமுக தொண்டர்களை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தி வெற்றி நமதே என்னும் எண்ணத்தில், அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப்பணி ஆற்றும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது.

அதிமுகவின் இந்த எழுச்சி முகம் தெரிந்ததால்தான், கூட்டணிக் கட்சியில் அதிமுகவுக்கு என பிரத்யேக மரியாதையை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கி வருகிறது. பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை தன்னருகே அழைத்து அமர வைத்ததும் அதன் எதிரொலிதான்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் டெல்லி பயணம் என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமல்ல, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் விரைவில் தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கும் அதிமுக தயாராக உள்ளது என்பதையே கட்டியம் கூறியிருக்கிறது.

இப்படி தேர்தலுக்காக அதிமுகவை இப்போதே தயாராக வைத்து, புரட்சித்தலைவி போலவே, முதல் ஆளாக அதிமுகவை களத்திற்கு அழைத்து வந்திருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி உண்மையிலேயே புரட்சித்தமிழர்தான் என்பது அரசியல் நோக்கர்களின் பதிலாக உள்ளது.

Exit mobile version