அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதும் தமிழகம் முழுக்க அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஒரே உற்சாகக் கொண்டாட்டங்கள்தான் … ஏன் இந்த உற்சாகம்? தொண்டர்களின் பூரிப்புக்கு என்ன காரணம்? தலைமை தான்.. ஒரு கடைக்கோடி தொண்டனின் உள்ளக்கிடக்கையை அப்படியே நிறைவேற்றிக்காட்டுவதுதானே கட்சித்தலைமையின் தலையாய கடமை? அதைத்தான் செய்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி…
திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பேரறிஞர் அண்ணா. அவர் வழியில் தமிழகத்தை வழிநடத்திய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவரின் மறைவுக்கு பிறகு கட்சி, ஆட்சி மட்டுமல்லாது தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கடைபிடித்த, சமூக நீதி காத்த வீராங்கனையாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா… அதிமுகவினர் தெய்வங்களாக போற்றி வணங்கும் இந்த தலைவர்களை, எங்கிருந்தோ வந்து, தகுதிக்கு மீறிய பொறுப்பை பெற்றுவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் இஷ்டத்திற்கு விமர்சிக்கும் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்துக்கிடக்கின்றனர் அதிமுகவில் இருக்கும் 2 கோடிக்கும் அதிகமான ரத்ததின் ரத்தங்கள்.., இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க நாங்கள் என்ன திமுகபோல அடிமைகளா என்று சீரியிருந்தார் சி.வி.சண்முகம்எம்பி… அதிமுகவால் பல கட்சிகள் வாழ்ந்துள்ளனவே தவிர, ஒருபோதும் வீழ்ந்தது இல்லை. ஆனால் நோட்டாவுக்கு கீழ் வாக்குகளை பெற்றுக்கொண்டு, அதிமுக தயவில் தமிழகத்தில் தங்களுக்கான அடையாளத்தை பெற்று வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சீரிப்பாய்ந்திருக்கிறது கழகம்.
ஆம், பாஜக உடன் இப்போது கூட்டணி இல்லை, தேர்தல் நேரத்தில் கூட்டணியை பற்றி முடிவெடுத்துக்கொள்வோம் என்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்களின் குரலாக ஒலித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று தொண்டர்களின் குரலாக கழகம் தற்போது அறிவித்திருப்பதை, ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் உயிர்மூச்சான பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரைப் போற்றி, அவர்கள் காட்டிய வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைபிடிடத்து அழைத்துச்சென்றுகொண்டிருக்கும் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி, தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்த்து, இந்த முடிவை எடுத்திருப்பதன் மூலம், தொண்டர்களிடம் அதீத நம்பிக்கையை பெற்று வருகிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருககிறது.
ஆக, இதுவரை அதிமுக கூட்டணியை வசைபாடியே பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பிழைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின், இனி என்ன செய்யப்போகிறார்? திமுகவிற்கு கிலியைக் கொடுத்திருக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி முறிவு? பாஜகவுடன் மறைமுகமாக உறவுகொண்டாடிய ஸ்டாலின், இனி நேரடியாகவே இணைந்து செயல்பட துடிக்கிறாரா? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், காலம் மாறும்.. காட்சிகளும் மாறும்… ஆக மொத்தத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற தொண்டர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி மீண்டும் தன் தொண்டர்களின் மனங்களில் நிறைந்துவிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி என்பதுதான் நிதர்சனம்.