திமுக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து நிதி அமைச்சர் பி.டி.ஆர் பாதியிலேயே ஏன் வெளியேறினார் என்பது குறித்தும், பிடிஆர் வெளியிட்ட 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ஆடியோ திமுக அமைச்சரவையில் பூகம்பத்தை கிளப்பியதா என்பது குறித்தும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
எதிர்பார்த்தது போலவே சர்ச்சையிலேயே முடிந்திருக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம். மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வந்தது தொடங்கி பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டின. அதிலும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பேசியதாகக் கூறப்படும் 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பான ஆடியோ வெளியானது திமுகவின் அதிகார மையங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பிடிஆர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமின்றி சதா சர்வ காலமும் பெண்களுடனேயே வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடி, கட்சியினரையும் விட்டு வைக்காமல் கல்லெறியும் பால்வளத்துறை அமைச்சர் நாசர், குடும்பத்தினரின் அதீத தலையீடு காரணமாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் மாற்றல் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் மே 2ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் அரங்கேறியது. அதன் வீடியோ காட்சிகள் வெளியானபோது ஒரு அதிர்ச்சி பரவியது… காரணம் முதலமைச்சருக்கு அடுத்து இருக்கவேண்டிய நிதி அமைச்சர் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அப்போதே இந்த அமைச்சரவைக் கூட்டம் என்பது எதை நோக்கி நகர்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கத் தொடங்கியிருந்தனர். அவர்களின் கணிப்பையும் மீறி கூட்டம் முடியும் முன்னரே வெளியேறியிருக்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன். இந்த காட்சி வெளியானதும் இந்த அமைச்சரவைக் கூட்டம் என்பது கண் துடைப்புக்கான கூட்டமா என்னும் கேள்வி எழுந்தது… இன்னும் ஐந்தே நாட்களில், இந்த ஆட்சி தனது 2ஆம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், ஆட்சியின் நிறை குறைகள் என்ன? கற்றதும் பெற்றதும் என்ன என்பது குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதையே பிடிஆரின் வெளிநடப்பு சொல்லியது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த மாதம் வெளிநாட்டுக்கு முதலமைச்சர் செல்ல இருப்பதால் அதற்கான ஒப்புதல் பெற அமைச்சரவை கூட்டப்பட்டதாக ஒப்புக்குச் சப்பானியாகவும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
திமுக நடத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிடிஆர் பாதியில் வெளியேறி இருப்பது என்பது கூட்டத்தில் நிகழ்ந்த குழப்பத்தையே வெளிப்படுத்தி உள்ளது. பிடிஆர் கிளப்பிய 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழலால்தான் திமுக அமைச்சரவையிலும் பூகம்பம் கிளம்பியிருகிறது. இதை எத்தனைக் கூட்டங்கள் நடத்தினாலும் அமைச்சரவையையே மாற்றி அமைத்தாலும் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு மாறாது என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.