விடியா அரசின் அலட்சியத்தால் 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகி உள்ளது குறித்தும், அதனால் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவினை, 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகக் காரணமானதன் மூலம், தவிடு பொடியாக்கி உள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு.
மருத்துவக் கல்லூரிகளை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால் இன்று 500 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோயிருக்கிறது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட 71 மருத்துவக்கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் பறித்துள்ளது.
கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது உள்பட இம்மூன்று மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைகளை தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியும், மருத்துவக் கல்வி இயக்ககம் அதை சரிசெய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த 3 மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. இந்த அங்கீகாரம் ரத்து நடவடிக்கையால் மூன்று கல்லூரிகளிலும் உள்ள 500 எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களும் பறிபோய் மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளது.
ஆட்சியில் வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறிய திமுகவால் இன்று வரை அதனை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துரையின் அலட்சியத்தால் 3 மருத்துவக்கல்லூரிகளே பறிபோயிருக்கிறது. அந்த கல்லூரிகளில் மருத்துவர் படிக்கும் எண்ணத்துடன் நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் கனவுகளையும் நொறுக்கி போட்டுள்ளது.
மாரத்தான் போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்லும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரால் தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் கட்டமைப்புகளை சரி செய்யமுடியாத அலட்சியம், அதன் அங்கீகாரத்தை ரத்தாக்கி உள்ளது.
3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்பதும், மருத்துவ கனவோடு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை மீண்டும் திமுக அரசு சிதைத்திருப்பதும் தெளிவாகி உள்ளது. இதற்கு பிறகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பாமல், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு திமுக அரசு முயற்சிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.