இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கட்டம் கட்டப்பட்டதா கரூர் கம்பெனி!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்தும், அவர்களது வாகனங்களை அடித்து நொறுக்கி திமுகவினர் அராஜகம் செய்த நிலையில், கட்டம் கட்டப்பட்டதா கரூர் கம்பெனி என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

தமிழ்நாட்டுக்கே தண்ணி காட்டி வரும் டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கட்டம் கட்டி வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருப்பது தான் இன்றைய டாப் நியூஸ்.

இந்த ரெய்டால் கதிகலங்கி இருக்கும் திமுகவினர் சோதனைக்கு வந்த அதிகாரிகளின் வாகனங்களை கடுமையாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதால், உயிருக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்படும் தமிழ்நாடு காவல்துறை, வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பளிக்காதது மாபெரும் இழுக்கு என்று அதிகாரிகள் சொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வாங்குவது குறித்தும், டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி திடீரென வருமான வரித்துறை ரெய்டு வருவதற்கு காரணம் என்ன?…

ஷங்கர் திரைப்படங்களில் வருவது போல 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியதில் இருந்தே, அவ்வளவு காசு எங்கிருந்து வந்தது ? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது..

முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் நடந்திருக்கும் இந்த ரெய்டு ஒட்டுமொத்த திமுகவையுமே மிகப்பெரிய கொதிப்படைய வைத்துள்ளது.

கடந்த காலங்களில் செந்தில்பாலாஜிக்கு எதிராக பேசிய ஸ்டாலின், அவர் திமுகவிற்கு வந்ததும், அவர்மீது போட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்கி அங்கும் யூடர்ன் தான் போட்டார் என்பது உலகறிந்தது.

பட்டி ஃபார்முலா, சிக்கன் பார்முலா, என பல பார்முலாக்கள் அறிமுகம் செய்த செந்தில் பாலாஜி இன்று ஐடி ரெய்டுக்கு ஒத்துழையாமை பார்முலாவையும் அறிமுகம் செய்து தன் உண்மை முகத்தை காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே திமுக எம்எல்ஏக்களின் வீடுகளில் நடந்த ரெய்டுகளுக்க வாய்திறக்காத திமுகவின் ஆர்எஸ்.பாரதி, டிகேஎஸ். இளங்கோவன் எல்லாம், தற்போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் பொங்குவது ஏன்? டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறைகளில் இன்னும் என்ன பார்முலாக்களை செய்திருப்பார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கும் வருமா? இந்த ரெய்டால் திமுக கம்பெனியின் திராவிட மாடல் ஆட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் காணுமா? அதிகாரிகள் கட்டம் கட்டியிருப்பது கரூர் கம்பெனிக்கா அல்லது ஸ்டாலினின் விடியா ஆட்சிக்கா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Exit mobile version