இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஆவினை விழுங்கப்போகிறதா அமுல்? திமுக கண்டுகொள்ளவில்லை ஏன்?

பால்வளத்துறை அமைச்சரை மாற்றிய பிறகும் கொஞ்சம் கொஞ்சமாக ஆவின் நிறுவனம் தேய்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அமுல் நிறுவனம் கால்பதிக்கப்பப்போவதை கண்டு கொள்ளாமல் திமுக அரசு இருப்பது குறித்தும், ஆவினை விழுங்கப்போகிறதா அமுல் நிறுவனம் என்பது குறித்தும்
அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

பால்வளத்துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் … அந்த துறையின் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது பலப்பல புகார்கள்… உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் பேர்வழி என்று அவரை அமைச்சரவையில் இருந்து விரட்டியடித்துவிட்டு நாடகம் நடத்தியது இந்த விடியா அரசு.

பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் கோரிக்கைகளை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் ஆவின் பால் விலையை மட்டும் ஏற்றி பச்சைக்குழந்தைகள் முதல் பல் இல்லாத பெரியவர்கள் வரை எல்லாரையும் வஞ்சித்தது இந்த விடியா திமுக அரசு.

தமிழ்நாட்டில் தினசரி 3.5 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், சுமார் 35லட்சம் லிட்டர் பால் மட்டுமே தற்போது ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது வெறும் 10 சதவீதம் மட்டுமே….மீதம் உள்ள 90% உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கவே திமுக அரசு முனைப்பு காட்டுவதன் மூலம், ஒருவேளை தனியார் பால் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கச்செய்யவே ஆவினை அழிக்கப்பார்க்கிறதா இந்த விடியா அரசு என்று எழுந்த சந்தேகக்குரல்கள் அமுங்குவதற்குள், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்கப்போகிறது என்ற செய்தி மக்கள் மனதில் பேரிடியாக விழுந்திருக்கிறது.

ஐயையே,,, இனி பச்சைப்புள்ளைக்கு பாலும் போச்சா இந்த ஆட்சியில … என்று தாய்மார்கள் கதறிக்கொண்டிருக்கையில், சாவகாசமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் திராணியற்ற முதல்வர்.. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டால் போதுமா? இது என்ன முதுகெலும்புள்ள அரசா? யாரைக்கண்டு அஞ்சுகிறது என்றெல்லாம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது கேட்ட ஸ்டாலின், இன்று தன் முதுகெலும்பை வாடகைக்கு விட்டுவிட்டாரா என்று கேட்கமாட்டார்களா பாதிக்கப்பட்டவர்கள்???

ஆவின் நிறுவனத்துக்காக பால் கொள்முதல் செய்யும்போது உற்பத்தியாளர்களுக்கு உரிய விலையை கொடுத்திருந்தால் ஏன் அவர்கள் நம்மூரு ஆவினை விட்டுவிட்டு.. குஜராத்தின் அமுலை நாடிச் செல்கிறார்கள்? அதை செய்யாமல் விட்டுவிட்டு தற்போது குத்துதே குடையுதே என்று அலறிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?

தமிழகத்தில் அமுல் நிறுவனமும் இங்கு அதிகளவு பால் கொள்முதலில் இறங்கும் பட்சத்தில் ஆவின் நிறுவனத்திற்க்கே ஒட்டுமொத்தமாக பூட்டை போட்டுவிட்டு, யாரும் இங்கே வந்து பூட்டை ஆட்டாதீர்கள் என்று போர்டு வைக்கப்போகிறாரா ஸ்டாலின்? என்பதே பொதுமக்களின் அச்சமாக உள்ளது…

இப்படி தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்கப்போகிறதா திமுக அரசு? உரிய விலை கொடுக்காததால் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்லும் உற்பத்தியாளர்களை உரிய விலை கொடுத்து தக்கவைக்குமா திமுக அரசு? அல்லது ஆவின் நிறுவனத்தை அழித்துவிட்டு அமுல் நிறுவனத்துக்கு வழியை விடப்போகிறதா திமுக அரசு? என்று கேள்விகளை அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version