இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய விவகாரத்தை மடைமாற்ற சாதிப்பிரச்சினையைத் தூண்டிவிடும் பொன்முடி!

கள்ளச்சாராய மரணத்தில் விடியா திமுக ஆட்சியின் லட்சணம் அம்பலமானதை மறைக்கவே அமைச்சர் பொன்முடி சாதிப் பிரச்சனையை தூண்டிவிடுவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்!

அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை விடியா ஆட்சியின் கோரக் கரங்கள் சூழ்ந்ததால், தமிழகம் வன்முறை காடாகவே மாறி உள்ளது. கொலை, கொள்ளை, கூட்டுப்பாலியல்வன்கொடுமை என்று சமூகவிரோதச் செயல்களின் களமாகவும் மாறிவிட்டது. கட்டுப்படுத்த இயலாத போதைப் பொருள் கடத்தலால் டண் கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை கைப்பற்றப்படும் நிலையில், தமிழகம் சர்வதேச போதைப் பொருட்களின் தலைநகராகவே மாறியுள்ளது.

இந்தப் போதைப் பொருட்கள் கடத்தலின் பின்னணியில் திமுக நிர்வாகிகளும், திமுக முக்கியப் புள்ளிகளின் அடிவருடிகளுக்கும் தொடர்பு இருப்பதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகி உள்ளது.இப்படி போதைப் புகையால் இருண்டு கிடக்கும் தமிழகத்தினை கள்ளச்சாராய சாவுகள் என்னும் அரக்கனும் கைப்பற்றிக் கொண்டிருப்பது, அழிவின் தொடக்கமா என்னும் அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 22பேர் உயிரிழந்திருப்பதும், அந்த சாராய விற்பனையில் திமுகவினர் கைதாகி இருப்பதும், இந்த ஆட்சியின் அவலட்சணத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. இப்படி அப்பாவிகளின் உயிர் குடிக்கும் ஆட்சியாக, பிணம் தின்னும் அரசாக திமுகவின் கோர முகம் வெளிப்பட்டு நிற்கிறது.

இதனால், மக்கள் சுதாரிப்பதற்குள் அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தங்களைப் பற்றி சிந்திக்க விடாமல் இருக்கவும், பிரச்சனைகளை திசை திருப்பவும் திமுக கையில் எடுத்து இருக்கும் கொடிய ஆயுதம் சாதிச்சண்டை. இந்த கோர ஆயுதத்தை கையில் ஏந்தியிருப்பவர் சர்ச்சைகளின் பிதாமகன் பொன்முடி. வெளிப்பார்வைக்கு அநாகரிகமாக நடந்து கொண்டாலும், பொன்முடி செய்யும் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் கலவரத்தையும் கலகத்தையும் ஏற்படுத்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதே வகையில்தான், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்திலும் சாதி துவேஷத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அங்குள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் போது கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்களுக்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் பொன்முடி மற்றொரு தரப்பினரை தரக்குறைவாகப் பேச இப்போது அது பூதாகரமாகி இருக்கிறது.

அமைதிப்படை அமாவாசையாய் இருதரப்பினர் இடையே சாதிய பூசல் ஏற்படும் வகையில் பொன்முடி நடந்து கொண்டதன் பின்னணி சாராயச் சாவுகளில் அரசு மீதான அதிருப்தியை மடைமாற்றவும், மறைப்பதற்காகவும் தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version