இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. 30 ஆயிரம் கோடி ஊழல், ஜி ஸ்கொயர் ரெய்டு, பேனா சிலை என மக்கள் விரோத திமுக தொடர்பான குற்றச்சாட்டுகள்!

30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், ஜி-ஸ்கொயர் ரெய்டு, மீன் வளத்துக்கு எதிரான பேனா சிலை என மக்கள் விரோத திமுக தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசாமல் ஊடகங்கள் வாய்மூடி மவுனம் காத்துவருவது தொடர்பாகவும், ஊடகங்களை ஸ்டாலின் உருட்டி மிரட்டி வைத்திருப்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கிறது தொடர்ந்து எழுந்து வரும் ஊழல் புகார்கள்…
அதிலும் முத்தாய்ப்பாக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள்ளாகவே ஸ்டாலினின் வாரிசும், மருமகனும் 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அந்த கட்சியின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே ஆடியோ வடிவில் தெரிவித்திருப்பது, பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த ஆடியோ வெளியானதுமே, ஸ்டாலினின் மருமகன் தொடர்பானதாகக் கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான ஏய்ப்பு செய்ததாக கடந்த 6 நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு அடித்து வருகிறார்கள். ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பல்வேறு கிளைகளில் நடந்துள்ள ரெய்டுகளில் பலநூறு கோடிகளுக்கு வரிஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திமுகவின் அதிகார மையங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பதாக வெளியான ஆடியோ குறித்தோ, ரெய்டுகளும் நடந்து வருவது குறித்து எந்த ஊடகங்களும் பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை… அத்தனையும் திமுகவுக்கு ஒத்து ஊதும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதே நேரம், கருத்து சுதந்திரத்தை ஒருபோதும் பறிக்கும் செயலை திமுக செய்வதில்லை என்று சொல்லும் ஸ்டாலின், தனது அரசின் அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினர் செய்யும் ஊழல்கள் குறித்து வெளியே எந்த தகவலும் கசிந்துவிடாமல் இருக்க ஊடகங்களின் குரல் வளையை நெறிப்பதாகவே தெரிகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதன் எதிரொலியாகவே, திமுகவின் தவறுகள் குறித்து இணையத்தில் எழுதும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.

இதே போன்று தான் திமுக அரசு பேனா சிலைக்கு அனுமதி வாங்கியுள்ளது எப்படி என்பது குறித்தும் ஊடகங்கள் வாய்திறக்க மறுக்கின்றன என்னும் குற்றச்சாட்டும் பரவலாகி உள்ளது.

வாரிசு அமைச்சரும் மருமகனும் ஆண்டுக்கு 30ஆயிரம் கோடி வசூல் செய்யும் நிலைக்கு எட்டியிருப்பது குறித்து ஊடகங்கள் வாய் திறக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கான ஊடகங்களாக செயல்பட முடியும். ஆட்சியாளர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டால் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, ஊடகங்களையும் மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Exit mobile version