இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய உயிரிழப்புகளால் கூட்டணியையே இழக்கப்போகிறாரா ஸ்டாலின்?

கள்ளச்சாராய விவகாரத்தால் மதுவிலக்கை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி போராடினால் இணைந்து போராடத் தயாராக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

கள்ளச்சாராய விவகாரம் விஸ்வருபமெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி போராடினால் நாங்களும் இணைந்து போராடத் தயார் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியதுதான் அரசியல் களத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்கே… திமுகவுடன் கைகோர்த்து 2019 நாடாளுமன்றத்தேர்தலையும் 2021 சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த விசிகவே இப்படி திமுகவைத் தூக்கி தூரவீசத்தயாராகிவிட்டதை பார்க்கும்போது இனி வரும் காலங்களில் அரசியல் களத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்று கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் வாய்மூடி மௌனம் காத்துவந்த நிலையில் திருமாவளவனின் இந்த கருத்தால் தற்போது திமுக கூட்டணியில் சர்ச்சை வெடித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளை சேர்க்கும் முனைப்பில் ஸ்டாலின் இருந்த நிலையில், அவரது திட்டங்களில் மண்ணை வாரி போட்டுள்ளன கூட்டணி கட்சிகள்.

ஏற்கனவே 12 மணி நேர வேலை மசோதாவில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக்கட்சிகள் வீதியில் இறங்கி போராடின… இப்போது விசிகவும் அதிருப்தியை அள்ளிக்கொட்டியிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி அம்பேல் ஆகிவிடுமோ என்று தோன்றுவதுதானே உண்மை

நான் தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று ஒருபுறம் மார்தட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் தன் சொந்த மாநிலத்திலேயே உடன் இருக்கும் கட்சிகள் தனக்கு எதிராகப் போகும்வரை அமைதி காத்துக்கொண்டு இருக்கும் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் தன் சொந்த மாநிலத்திலேயே கூட்டணியை தக்க வைக்க முடியாத ஸ்டாலின்… சொந்த மாநில மக்களின் எதிர்ப்புகளை வாரி அணைத்துக்கொள்ளும் ஸ்டாலின் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அரசியல் செய்யப்போகிறார் என்று சொலில், ஹிஹிஹிஹி என்று வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள்..

மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் கூட்டணியை முறிப்போம் என்று சொல்லும் அளவுக்கு சீரியஸ் முகம் காட்டும் திமுகவின் கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிக்கப்போகிறார் ஸ்டாலின்? ஒருவேளை எப்படியாவது ஏற்கனவே திமுக கூட்டணியை எப்படி முறிப்பது என்று காரணம் தேடிக்கொண்டிருந்த அதன் கூட்டணி கட்சிகள் இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை காரணமாக வைத்து அடித்துப்பிடித்து விட்டால் போதும்டா சாமி என்று திமுகவைவிட்டு வெளியேற துடிக்கின்றனவா? அல்லது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பல கட்சிகளும் அவர் பின்னால் அணிதிரள காத்துக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விகள்தான் எழுகின்றன.

Exit mobile version