இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சமூகப்போராளிகள், நடிகர்கள் திமுகவை எதிர்த்து கேள்விகேட்பார்களா?

கள்ளச்சாராயம் குடித்து கிராம மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆளும் திமுகவை எதிர்த்து கூட்டணிக் கட்சிகள் வாய்திறக்காமல் மவுனம் காப்பது குறித்தும், சமூகப்போராளிகள், நடிகர்கள் எல்லாம் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்காமல் வாய்மூடி இருப்பது குறித்தும், அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தவறாமல் அரங்கேறும் விஷச் சாராய சாவு இப்போதும் நடந்தேறியுள்ளது. விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, 20 பேரின் வாழ்வை கள்ளச்சாராயம் மூலமாக அஸ்தமனமாக்கி உள்ளது. இன்னமும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி, மரண ஓலத்தையும் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கண் பார்வை பாதிக்கப்பட்டும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் சிகிச்சையில் பலரும் இருந்து வருகின்றனர். அதே போல செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே போலி மதுபானம் அருந்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கள்ளச்சாராய சாவுகளுக்குப் பின்னால் திமுகவினரின் கொடுங்கரங்கள் இருப்பதும் இப்போது அம்பலமாகி உள்ளது. திமுகவினரே விஷ சாராயத்தை காய்ச்சுவதாகவும், விற்பனையில் ஈடுபடுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகமும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் இந்த கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரையும் இருவரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர்.

விடியா ஆட்சியில் எழுந்துள்ள கள்ளச்சாராய மரண ஓலம் பொதுமக்களை கலங்கடிக்க, சுரணையற்ற அதன் கூட்டணிக் கட்சிகளை மட்டும் ஒன்றும் செய்யவில்லை போலும்… அதனால்தான் ஆளும் அரசுக்கு எதிராக எந்தவித கோஷங்களையும் எழுப்பாமல் அடைகோழி போல அடைந்து கிடக்கிறார்கள். ஆமாம், அவர்கள் அடைகாப்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை.

அதேபோல அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்போதெல்லாம், சின்ன விஷயங்களுக்கும் சீறிவரும் சீஷன் சமூக ஆர்வலர்களும், நடிகர்களும் இப்போதைய நிகழ்வு குறித்து எதிர்ப்புக் குரல் எதையும் கொடுக்கவில்லை. ஒருவேளை அதிமுக அனுமதித்த ஜனநாயகத்தை திமுக அனுமதிக்காது என்பதால், இப்படி பதுங்கியிருக்கிறார்களோ?

காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்காது என்பதால், விடியா அரசின் காவல்துறை சமூக விரோதிகளை காப்பதற்காக மட்டும்தான் செயல்படுகிறதா?

திமுக அரசை விமர்சிக்காமல் கூட்டணிகட்சிகள் வாய்மூடி மௌனமாக இருக்குமேயானால், அவற்றை மக்கள் புறந்தள்ளியே தீருவார்கள். நடிகர்கள், சமூகப்போராளிகள் எல்லோரும் மௌனம் காத்துக் கொண்டிருந்தாலும் மக்களின் கேள்விகளை நிச்சயம் திமுக எதிர்கொள்ளும்… அது வரும் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version