இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மூன்றாவது முறையாக மாறிய திமுக அமைச்சரவை! பிடிஆரின் ஆடியோவால் அதிர்ந்த திமுக!

ஆடியோ விவகாரத்தால் அதிர்ந்து போன திமுக அமைச்சரவை 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்காததால், வாரிசுகளால் திமுக அமைச்சரவை நிரம்பி வழிவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பான பிடிஆரின் ஆடியோவால் திமுக அதிர்ந்து போயுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமைச்சரவையை மூன்றாவது முறை மாற்றி இருக்கிறார் என்பது தான் இன்றைய ஹாட் டாப்பிக்.

திமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்த பி.டி.ஆரை, நாசரைப் போல அமைச்சரவையை விட்டு தூக்கி எறிவார்கள் என்று பேசப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த நிதித்துறையைப் பிடுங்கிவிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையை ஒதுக்கியுள்ளனர். எங்கே பி.டி.ஆரை வீசிவிட்டால், அவர் கூறிய ஊழல் சமாச்சாரம் உண்மைதான் என்பதை திமுகவே ஒப்புக் கொண்டதாகி விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதே நேரத்தில் முக்கியமான நிதித்துறையை, தங்கம் தென்னரசுவுக்கு கொடுத்திருப்பதும் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 12மணி வேலை நேர சட்டத்திருத்தம் கொண்டு வரக் காரணமானவர் தங்கம் தென்னரசு என்பதால்தான் இந்த கேள்விகளும், சந்தேகங்களும்.

அதே போல மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறையைத் தான் பிடிஆருக்கு வழங்கியிருக்கிறார்கள். 2021ல் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ் அந்த துறையில் ஜொலிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு பால்வளத்துறையை கொடுத்திருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜாவுக்கு, முதல்முறையாக தொழில்துறைஅமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார் ஸ்டாலின்…. தனது நெருங்கிய நண்பரான டி.ஆர்.பாலுவுக்கு இதன்மூலம் கைமாறு செய்திருக்கிறார் ஸ்டாலின் என்று கூறப்பட்டாலும், தனது வாரிசுக்கு பக்கபலமாக இன்னொரு வாரிசையும் அமைச்சராக்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தற்போதைய திமுக அமைச்சரவையில் இருக்கும் தங்கம் தென்னரசு, பிடிஆர், கீதா ஜீவன், அன்பில் மகேஷ், உதயநிதி, டி.ஆர்.பி. ராஜா எல்லோருமே வாரிசுகள்தான். தனது வாரிசுக்காகத்தான் சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டி, திமுக அமைச்சரவையையே வாரிசுகளால் நிரப்பியுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். உண்மையிலேயே பி.டி.ஆரின் ஆடியோ விவகாரம் திமுகவின் அதிகாரமையங்களை அசைத்து பார்த்துள்ளதே 3வது முறை நிகழ்ந்துள்ள அமைச்சரவை மாற்றம் என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

 

Exit mobile version