அமைச்சரவையில் இருந்து நாசரை நீக்கி டி.ஆர்.பி ராஜாவை அமைச்சராக்கி இருப்பது குறித்தும், தனது தூக்கத்தை கெடுத்த அமைச்சர்களை ஸ்டாலின் மாற்றுகிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்….
சொந்தக் கட்சிக்காரர்களையே கல் எறிந்து விரட்டிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரை, அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசியிருக்கிறார் ஸ்டாலின்.
அமைச்சரவை மாற்றப்படுகிறது என்று யூகங்கள் காற்றில் பறந்தபோதே `ஆடியோ புகழ்’ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், `கல்லெறி’ நாசர் என்ற பெயர்கள்தான் மாற்றத்தில் அலையடித்தது. யூகங்கள் இன்று உண்மையாகி இருக்கிறது.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரால் தனது துறையில் சோபிக்க முடியவில்லை என்பதை விட, பால் விலை உயர்வு, பால் கொள்முதல் பிரச்சனைகள், முகவர்களுடனான உரசல் என்று துறைரீதியாக தினம் தோறும் சந்தித்த பிரச்சனைகள் மக்கள் மன்றத்தில் திமுகவின் பெயரை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதுமட்டுமின்றி அமைச்சரின் தனிப்பட்ட நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கட்சிக்காரர்களை கல் எறிவதும் கூட்டத்தில் வைத்து தாக்குவது என்று மெச்சூரிட்டி இல்லாமல் அவர் செய்த அலம்பல்கள் கட்சிக்கும் சேர்த்தே அவப்பெயரை உண்டாக்கியது.
அதுமட்டுமின்றி கவுன்சிலராக இருக்கும் நாசரின் மகன் தந்தையின் பெயரைச் சொல்லி ஆவடி மாநகராட்சியில் செய்யும் அரசியல் அதகளங்கள் சொந்தக் கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதும், நாசரின் பதவிக்கு வேட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி தன்னை தொடர்ந்து தூங்கவிடாமல் செய்வதாலும்,
ஆவினில் நாசர் செய்த ஊழல்கள் வெளி உலகில் வருவதற்கு முன் அதனை முடக்கிவிட வேண்டும் என்பதற்கான நடவடிக்கையாகவுமே அவரை நீக்கம் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதே நேரம் நாசரின் நீக்கத்தைப் பயன்படுத்தி தனது வாரிசுக்கு கூடுதல் கேடயமாக டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின் என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இப்படி, வாரிசு அமைச்சருக்கு உதவும் வகையில் அடுத்த கட்டமாக புதிய அமைச்சர்களை உருவாக்குகிறாரா ஸ்டாலின்?
ஆடியோ வெளியிட்டு தனது தூக்கத்தை கெடுத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின், நாசரை மட்டும் நீக்கியது ஏன்? தனது வாரிசு அமைச்சருக்கு உதவும் வகையில் அடுத்த கட்டமாக புதிய அமைச்சர்களை உருவாக்கத்தான் இந்த அமைச்சரவை மாற்றமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.