இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. 500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு!

500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்திலேயே தானியங்கி மது விற்பனையை திமுக அரசு தொடங்கி இருப்பது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

2023-24 ஆம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 182 கோடி ரூபாயாக அரசின் சொந்த வரி வருவாய் இருக்கும் என சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கையின்போது கூறியிருக்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன். இதில், டாஸ்மாக் மூலமாக மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது திமுக அரசு.

படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவருவோம்… டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்றெல்லாம் மதுவுக்கு எதிரானவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்ட திமுகதான் இப்படி மதிப்பிட்டுள்ளது.

அதிலும் டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையிலேயே 500 மதுக்கடைகளை மூடுவோம் என்று அறிவித்திருக்கிறார். ஆமாம்…. டாஸ்மாக் கடைகளை அடைத்துவிட்டு மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற அனுமதி என்று மதுபானங்களின் விற்பனையை வேறொரு வடிவத்தில் அதிகரிக்கும் யுத்தியை கையில் எடுத்திருக்கிறது திமுக… காரணம் அவர்களின் கமிஷன் கல்லா எப்போதும் நிறைந்து கொண்டே இருக்க வேண்டும்…

கடந்த 2016ல் மீண்டும் அரியணை ஏறிய புரட்சித் தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி முதல் கையெழுத்தாக 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியிலும், நெடுஞ்சாலையோரம் இருந்தவை, பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே வைக்கப்பட்டவை, பார்கள் என 1,362 டாஸ்மாக் கடைகள் பாரபட்சமின்றி மூடப்பட்டன. அப்படி அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போதும், ”மூடு டாஸ்மாக் மூடு” என்ற கோஷத்தை பொய்யாக எழுப்பி மக்களிடையே போலியான ஒரு பிம்பத்தை கட்டமைத்தது திமுக.

இன்று அதே திமுகதான் டாஸ்மாக் மூலமாக மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்படுத்த, தீயாய் உழைத்து வருகிறது. அதன் ஒருபடியாக இன்று தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தை நிறுவியுள்ளது இந்த அரசு… கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக இத்தகைய எந்திரத்தை நிறுவியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால், டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்கே அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் கம்பெனிக் காரர்களின் வசூல்தான் காரணம் என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.

உண்மையிலேயே செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருந்தால்… அந்த கடைகளின் பட்டியலை வெளியிட்டிருக்கலாமே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மூடு டாஸ்மாக்கை மூடு என்று கோஷம்போட்டுவிட்டு இன்று தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டிய உண்மையான நோக்கம் என்ன என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மொத்தத்தில் மதுவிற்பனையை அதிகரித்து இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணத்திலேயே திமுக அரசு செயல்படுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Exit mobile version