திமுக அரசின் பித்தலாட்டங்களை ஆளுநர் பட்டியலிட்டுள்ள நிலையில், ஆளுநர் மற்றும் திமுக அரசு இடையேயான மோதல் முற்றுவது குறித்தும், ஆளுநரை எதிர்ப்பதில் கவனம் செலுத்தும் ஸ்டாலின் ஆட்சியை கவனிப்பது எப்போது? என்பது தொடர்பாகவும் அலசுகிறது நியூஸ் ஜெ தலையங்கம்.
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் வேளையில் திமுகவின் அட்டூழியங்களை, பித்தலாட்டங்களை நார் நாராக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி… தமிழ்நாட்டில், எவ்வளவு திராணியற்ற முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின் என்றும், சித்தாந்தம், மாடல் என்கின்ற பெயர்களில், பொய் பிரச்சாரங்களை எப்படியெல்லாம் கட்டவிழ்த்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அரசு என்றும் அடுக்கியதோடு மட்டுமின்றி, 8 மசோதாக்களுக்கான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்…
ஒரு அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், அவர் ஒரு தபால்காரர் என்றெல்லாம் வெற்று வாய்ச்சவடால் விடும் ஸ்டாலின், ஒப்புதல் வழங்காமல் வைத்திருக்கும் 8 மசோதாக்களின் நிலை என்ன என்று ஏன் இதுவரை ஆளுநரை கேட்கவில்லை? பயமா?
அண்ணா திமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் அடிமை அரசா என்று கேள்வி கேட்ட ஸ்டாலின், இன்று கண்ணாடியைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டுக்கொள்வாரா? சட்டமன்றத்தில் ஆளுநரை அவமானம் செய்த ஸ்டாலின், டீ குடிக்க ஆளுநர் மாளிகை சென்றாரே, எதற்காக? யார் மேல் கொண்ட பயத்தால் சமாதானம் பேசப்போனார்? திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பினால் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலினுக்கு, உடனே தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கவர் செய்யப்பார்ப்பதைத் தவிர வேறு என்ன தெரியும்? துணிவு என்றால் என்ன என்று தெரியுமா? கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காகவெல்லாம் காத்துக்கொண்டிருக்காமல் அரசாணை வெளியிட்ட எடப்பாடி கே பழனிசாமியின் தைரியத்தை பார்த்தாவது ஸ்டாலினுக்கு துணிவு வந்திருக்க வேண்டாமா?
இன்னொரு புறம், அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஆளுனரைப் பார்த்து, ஊழல் பட்டியல், அந்தப்பட்டியல், இந்தப்பட்டியல் என்று கொடுக்கும்போது மட்டும் ஆட்டுக்குத்தாடி, நாட்டுக்கு ஆளுநர் என்ற வாசகம் எல்லாம் நினைவில் இல்லையா ஸ்டாலினுக்கு? இன்றைக்கு மட்டும் ஆளுநர் அரசை விளாசியவுடன் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதா ? என்று கடுமையாகவே கேட்கின்றனர் இந்த விவகாரம் அறிந்தவர்கள்…
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்ன ஆளுநரின் பேட்டியைப் பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார் என்பதுதான் ஆளுநருடனான திமுகவின் மோதல் போக்கு அம்பலப்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆளுநருடன் சண்டையிட்டுக்கொண்டே இருப்பதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னெடுப்பதில் அக்கறை காட்டுவதே ஆளும்கட்சிக்கு அழகு என்கிறார்கள் அவர்கள். ஸ்டாலின் கேட்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?