டாஸ்மாக்கின் மூலம் அரசு செய்யும் தில்லாலங்கடிகளை செய்தி ஊடகங்கள் அம்பலப்படுத்தும் நிலையில், டாஸ்மாக் பற்றி பேசும் ஊடகங்களை செந்தில்பாலாஜி மிரட்டுவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
டாஸ்மாக் நிறுவனத்தை நம்பி மட்டுமே அரசு நடைபெறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது வேதனைக்கு உரியது. அரசுக்கு நிர்வாகத் திறமையில்லை என்னும் நிலையை ஊடகங்களே உருவாக்கிக் கொள்கின்றன… வேறு வேறு மாநிலங்களில் என்னநடைமுறைகள் உள்ளது? என்பது தெரியாமல் செய்தி வெளியிடப்படுகின்றன. செய்தியை வெளியிடும் போட்டியில் உண்மைத்தன்மையை அறியாமல் ஊடகங்கள் செய்தியை வெளியிடுகின்றன என்று தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஊடகங்கள் மீது கரித்து கொட்டியிருக்கிறார் டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜி… அதுமட்டுமல்லாமல், பொய்யான செய்தியை வெளியிடுவதாக ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன் என்றும் மிரட்டலை அரங்கேற்றியுள்ளர்.
அமைச்சரை இப்படி ஆதங்கப்படவும், ஆத்திரப்படவும் செய்துள்ள செய்தி என்ன தெரியுமா? மால்ஷாப்களில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் வெண்டிங் மெஷின் எனப்படும் தானியங்கி மதுபான இயந்திரம் குறித்த செய்திதான்.
தன்னோடு செய்தியாளர்களையும் உடன் அழைத்துச் சென்று மால் ஷாப்பில் ஆய்வு நடத்தியபின் பேட்டி தட்டியிருக்கிறார்… நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? அப்படியா இருக்கிறது? இப்படியா இருக்கிறது என்றெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டவர், பத்திரிகையாளர்களை கேள்வி கேட்கவிடவில்லை…
அதுமட்டுமின்றி அரசு மீது குற்றச்சாட்டு சொல்லப்பட முடியாத சூழலில் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை வைத்து குற்றம் சாட்டுகிறார்கள் என்றும், பூடகமாக செய்தி நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் என்பதும் ஊடக சுதந்திரம் என்பதும் பறிக்கப்பட்டிருப்பது கண்கூடு… அதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசன் சார்பில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டது. அதாவது ஜீ ஸ்கொயர் நிறுவனத்தையும் தன்னையும் இணைத்து செய்தி வெளியிட்டால் வழக்கு தொடரப்படும் என்று… அதே பாணியைத்தான் தற்போது செந்தில்பாலாஜியும் கடைப்பிடித்துள்ளார்… டாஸ்மாக் தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது அமைச்சரின் இந்த செய்தியாளர் சந்திப்பு…
அதே நேரம் எதிர்க்கட்சி தலைவரின் டாஸ்மாக் தொடர்பான எதிர்வினைகளும் அமைச்சரின் உறக்கத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. அதனால்தான் மால்ஷாப்களை அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள் என்று பதறியபடி பேசியிருக்கிறார். எலைட் ஷாப் என்ற பெயரில் நடத்தப்பட்ட அத மதுபானக்கடைகளில் எங்கும் இதுபோல வெண்டிங் மெஷின் எதுவும் கிடையாது என்பதும், அது திமுக ஆட்சியில்தான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வசதியாக மறந்துவிட்டார் போலும் செந்தில் பாலாஜி.
டாஸ்மாக் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக செய்தி ஊடகங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மிரட்டுவது என்பது அப்பட்டமாகவே தெரியவந்துள்ளது. விடியா ஆட்சி குறித்தும், அதன் துறைகள் குறித்தும் உண்மைகளைத் தெரிவிக்க எத்தனை மிரட்டல்களை திமுக விடுத்தாலும், மக்கள் மன்றத்தில் அந்த உண்மைகள் அம்பலமாகியே தீரும்… அது ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பியே தீரும் என்கிறார்கள் உண்மையின் பால் அக்கறை கொண்ட நேர்மையான ஊடகவியலாளர்கள்.