தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தி, சிறு குறு தொழில்கள் முடங்கும் அபாயத்தை விடியா அரசு உருவாக்கி இருப்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
இந்த கோடையில் வெந்து தணிந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டை பரிசாக கொடுத்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது விடியா திமுக அரசு.
இப்போது வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக ஆளும் திமுக அரசு அறிவித்து அடுத்த பேரிடியை இறக்கி இருக்கிறது.
தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணம் உயர்கிறது என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில், அது நம்மை நோக்கி வந்தே விட்டது என்னும் ரீதியில் அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆளும் திமுக அரசு. வணிக மற்றும் தொழில் சார்ந்த கட்டடங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்தி அவர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது தமிழக அரசு.
சட்டமன்ற தேர்தலின் போது மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது, மாதந்தோறும் மின்பயனீட்டு அளவு கணக்கீடு செய்யப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், மின்கட்டணத்தை உயர்த்தி மக்களீன் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. கொரோனாவால் கலங்கியிருந்த மக்களை இந்த கட்டண உயர்வு கலக்கத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் 9 மாதங்களில் தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் கபளீகர செயல்களால் மின்சாரத்துக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலையில்தான் உள்ளது.
தொடர்ச்சியான மின்வெட்டு, மின்னழுத்த குறைபாடு காரணமாக தொழில் வணிக நிறுவனங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மின்கட்டணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. கொரோனா பாதிப்புக்குப் பின் மெல்ல மெல்ல எழுந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் மீண்டும் பாதிக்கப்படும். மின்கட்டண உயர்வுக்காக தங்களின் உற்பத்தி பொருட்களின் விலையை அந்நிறுவனங்கள் அதிகரித்தால் அது நுகர்வோர்களை பாதிக்கும் அபாயமும் உள்ளது.
தமிழகத்தை தொழிலில் முன்னேற்றுவதாகக் கூறிக் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்தி சிறு, குறு தொழில் நிறுவனங்களை முடக்கும் வேலையையே திமுக செய்துள்ளதாகவும், மீண்டும் மீண்டும் மக்களின் அதிருப்தியையே விடியா அரசு சம்பாதிப்பதாகவும் தொழில் முனைவோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.