இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில்விபத்து சம்பவத்தில், பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லாமல், உதயநிதியை அனுப்பி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அதிரச் செய்துள்ளது ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோர விபத்து. தடம் புரண்ட பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் மீது மோதிய ஷாலிமார் – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், அந்த வழியாகச் சென்ற சரக்கு ரெயில் மீதும் மோத, அந்த இடமே ரணகளமாயிருக்கிறது.
விபத்து குறித்த தகவல்கள் கிடைத்ததும் ரயில்வே , போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும், அக்கம்பக்க பொதுமக்களும் அங்கு குவிந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களின் தொடர்ச்சியான சைரன் ஒலி அந்தப் பகுதியின் பதற்றத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றன.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக அதிகாரிகளுடன் அந்த இடத்துக்கு விரைந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறார். ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆகியோரும் நேரடியாக விபத்து பகுதிக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்னும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளனர்.
இந்த ரயில் விபத்தில் சிக்கிய ஷாலிமார் – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்து வந்து, பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை சந்திக்கவோ, ஆறுதல் கூறவோ முதலமைச்சர் ஸ்டாலின் ஒடிசாவுக்குச் செல்லவில்லை… தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பானுக்கெல்லாம் சென்றுவந்தவர் இந்தியாவுக்குள் இருக்கும் ஒடிசாவுக்கு செல்லாமல், தனது வாரிசான உதயநிதியை அனுப்பி வைத்துள்ளார். பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழகத்தை சேர்ந்தோர் மேல் அக்கறையுள்ளவர் முதல்வர் என்றால், அவர்தான் கிளம்பி சென்றிருக்க வேண்டும், அல்லது, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரையாவது அனுப்பியிருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல், அங்கு வாரிசு அமைச்சரை அனுப்பியிருப்பது, ரோம் தீப்பற்றி எரிந்த போது நீரோமன்னன் பிடில் வாசித்தது போல, தமிழகத்தை சேர்ந்தோர் துயரில் இருக்கும்போது வாரிசு அமைச்சருக்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தானா?
தொழில் முதலீடு என்ற பெயரால் சிங்கப்பூர், ஜப்பான் போகத் தெரிந்தவருக்கு ஒரிசாவுக்கு செல்ல மனமில்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், தமிகத்தைச் சேர்ந்தவர்களின் துயரில் பங்கெடுப்பதை விட கருணாநிதி 100 கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதுதான் ஸ்டாலினுக்கு முக்கியாகியிருக்கிறதா? என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வாரிசு அமைச்சரை ஒடிசாவுக்கு அனுப்பி இருப்பதும் வெற்று விளம்பரத்துக்குத்தான் என்று காட்டம் காட்டுகின்றனர்.