தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிக்க திமுக அழுத்தம் தரும் சூழலில், டெல்லிக்கு விரைந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி. தன் கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்களை தீர்க்க வழியின்றி இருக்கும் திமுக, தமிழக காங்கிரஸ் கட்சியை ஆக்கிரமிக்கப்பார்க்கிறதா என்று அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அந்த கட்சி ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்ததாகவும் வரலாற்று செப்பேடுகளில் தேடும்அளவுக்குத்தான் இருக்கிறது அக்கட்சியின் செயல்பாடுகள்… ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலக்கட்சியோடு சேர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று முட்டிமோதி சில சீட்டுக்களைப் பிடித்துவிடுவதே குதிரைக்கொம்பாக இருக்கிறது.
வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற விதி இருந்தும் 5 ஆண்டுகளாகத் தலைவராக தொடர்ந்து கொண்டிருக்கிறார் கே.எஸ். அழகிரி… ஓஓஓஒ அவ்வளவு நன்றாக கட்சியைப் பார்த்துக்கொள்கிறாரா என்று எண்ணுவதா? அல்லது, தலைமைக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லாததால் மாற்றவில்லையா? இல்லை, மாற்றினால் ஏற்கனவே இருக்கும் கோஷ்டிகள் இன்னுமின்னும் அதிகமாயிடும் என்று பயந்துவிட்டதா டெல்லி தலைமை என்றெல்லாம் எண்ணங்கள் மேலெழுகின்றன…
கடந்த நவம்பர் மாதம், சத்ய மூர்த்தி பவனா இல்ல சண்டை போடுற பவனா என்று கேட்குமளவுக்கு அடிதடி, ரத்தம் ரணகளம்….சண்டை, சட்டைக் கிழிப்பு, சஸ்பெண்ட்…. என்று கலவர பூமியாகவே மாறிப்போய் இருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம்… இத்தனைக்கும் அக்கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி அலுவலகத்தில் இருக்கும்போதே இத்தனை பஞ்சாயத்துக்களும் நடந்திருக்கிறது என்றால், யாரை சொல்லி என்ன செய்ய?
அவர் வேண்டாம் இன்று இவர், இவர் வேண்டாம் என்று அவர் என ஒட்டுமொத்த கட்சியும் கோஷ்டிப்பூசலால் உருண்டுகொண்டிருக்க, குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறது திமுக…. அடுத்த கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டு வருவதாக வாய்கிழிய பேசும் திமுக, தற்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்தத்தலைவர் திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒதுக்கும் சீட்டுகளை வாங்கிக்கொண்டு கப்சுப் என்று செல்லும் ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளையெல்லாம் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது… ஏற்கனவே, ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஸ் இளங்கோவன் தான் வேட்பாளர் என்று உத்தரவிட்டதில் தொடங்கி, தற்போது உட்கட்சி விவகாரத்திலும் மூக்கை நுழைக்கத்தொடங்கிவிட்டது திமுக. இதனாலேயே தற்போதைய தலைவர் பதவியை தற்காத்துக்கொள்ள டெல்லிக்கு பறந்திருக்கிறார் கே.எஸ். அழகிரி…
இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடுவதால், அவர்களது கூட்டணியிலும் இது பிரதிபலிக்குமா? எழுவர் விடுதலையில் தங்கள் கொள்கைக்கு முரணாக செயல்பட்ட திமுகவை கண்டிக்கக்கூட திராணியில்லாமல் மௌனப் போராட்டம் செய்து வாய்மூடி இருந்தது ஏன்? அவரவர்களின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணிக்கட்சி வந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்குத்தான் இருக்கிறதா காங்கிரஸ் கட்சியின் நிலை? தன் கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்களை தீர்க்க வழியின்றி தவிக்கும் திமுக, தமிழக காங்கிரஸ் கட்சியை ஆக்கிரமிக்கத் துடிப்பதை தடுத்து நிறுத்த முன்வருமா தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதுதான் அக்கட்சித்தொண்டர்களின் கேள்வியே.