இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! டயர்கள் வாங்குவதில் ஊழல் செய்த ராஜகண்ணப்பன் மற்றும் சிவசங்கர்!

அரசு போக்குவரத்துத் துறையில் டயர்கள் வாங்குவதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பூதாகரமாகி உள்ளது. அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால் ஸ்டாலினின் அமைச்சரவைக்கு ஆப்பு விழுந்துள்ளது குறித்து விளக்குகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

ஊழல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பதில் திறமை வாய்ந்தவர்கள் திமுகவினர்தான் என்பதை ஸ்டாலினின் அமைச்சரவை சகாக்களை சுற்றிச் சுழன்றடிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே அம்பலமாக்கி வருகின்றன.

தற்போது மீண்டும் போக்குவரத்து துறையில் புதிய ஊழல் ஒன்று பூதாகரமாகி உள்ளது. ஏற்கனவே செந்தில்பாலாஜியைப் போலவே போக்குவரத்து துறையில் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பலகோடிகளை அமைச்சர் சிவசங்கர் வாங்கியிருப்பதாக ஊழல் குற்றச்சாட்டுகள் பரபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு புதிய ஊழல் குற்றச்சாட்டு முன்னாள் மற்றும் இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர்களான ராஜ கண்ணப்பன் மற்றும் சிவசங்கர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் மறுசுழற்சி செய்த டயர்கள் வாங்குவதிலும், டயர்கள் மறுசுழற்சிக்கான ரப்பர்கள் வாங்குவதிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஊழலின் தொடக்கப்புள்ளி அமைச்சர் ராஜகண்ணப்பன் என்கிறார்கள்.

மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை வாங்குவதற்கு ELGI என்னும் ரப்பர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் டயர்கள் 12 ஆயிரம் கிலோமீட்டர்தான் ஓடுவதாகவும், டயர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை என்பதால் டயர் வெடித்து விபத்துகள் நிகழ்வதாகவும் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடந்த 1996 காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடியால் அறிமுகப்படுத்தப்பட்ட கோவையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் டயர்களின் தன்மை காரணமாக, கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ராஜகண்ணப்பன் தனது இலாகா மாற்றப்படுவதற்குமுன்பாக இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தார். இதையே அமைச்சர் சிவசங்கரும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், போக்குவரத்து கழக டெப்போக்களில் பேருந்து டயர்களின் மைலேஜை குறிக்கும் ஆவணங்களை எல்லாம், அமைச்சரின் அலுவலகத்துக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போன்று டயர் மறுசுழற்சிக்கான மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும் சிவசங்கர் மீது புகார் வாசிக்கப்படுகிறது. இப்படி தரமற்ற டயர்களைப் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த போதும், இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? எதிர்கேள்வி கேட்காமல் தனக்கு வருமானம் கொண்டு வருபவர்களை மட்டும்தான் ஸ்டாலின் அமைச்சராக்கி உள்ளாரா? தொடர்ந்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில் விரைவில் திமுக ஆட்சியே ஊழலுக்காக கலைக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version