இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பதவியை இழந்த செ.பா! அடுத்தது என்ன? திக் திக் திமுக!

நான்காவது முறையாக விடியா அரசின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெய்டு மற்றும் கைதால் தனது இலாகாக்களை பறிகொடுத்த டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

வருமான வரித்துறை ரெய்டு…. அதையடுத்து அமலாக்கத்துறை ரெய்டு…..ரெய்டுக்குப் பின் இரவோடு இரவாக கைது….கைது செய்யப்பட்டதால் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதி…..இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக சென்று கொண்டிருக்கிறது செந்தில்பாலாஜியின் விவகாரம்….

இதில் அடுத்த ட்விஸ்ட்டாக செந்தில்பாலாஜியின் பதவியை பறித்திருக்கிறது திமுக தலைமை… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர் பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது கட்சியே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் எதுவும் செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன? என்று தமிழக அரசியல் களத்தில் எழுந்த சர்ச்சைப் புயல் காரணமாக செந்தில்பாலாஜியின் பதவி என்னும் பல் பிடுங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது…..இலாகாக்கள் பிடுங்கப்பட்ட நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார் செந்தில்பாலாஜி…

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சரவை மூன்று முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜி விவகாரத்தால் தற்போது நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றி, அந்த துறையை நிர்வகித்து வந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறையை ஒதுக்கியது திமுக அரசு….

அதன்பின்னர் தனது வாரிசுக்கு தனது வாரிசுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறையை ஒதுக்கி அமைச்சாராக்கி இரண்டாவது மாற்றத்தை செய்தார்.
ஆடியோ புகழ் பிடிஆரின் துறையை மாற்றியது, ஆவடி நாசரிடமிருந்து பால்வளத்துறையை பிடுங்கி மனோ தங்கராஜுக்கு கொடுத்தது, தனது நண்பரான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜாவை தொழில் துறை அமைச்சராக்கியது என்று மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்தார் ஸ்டாலின்.
வாரிசு அமைச்சரை துணை முதலமைச்சராக்குவார் என்று எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருந்த நிலையில்தான், வாண்டடாக ஊழல் புகாரில் சிக்கிய செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு இருவருக்கு கொடுத்து 4வது முறையாக
அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில் அமைச்சரவையில் 4வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் இத்தோடு முடியுமா? அல்லது இனிமேலும் தொடருமா? செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக்கி இருப்பதன் மூலம் அவரை காப்பாற்றத் துடிக்கிறாரா ஸ்டாலின்? தற்போது இலாக்கா பறிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி அடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் வழக்கம் போல கட்சித் தாவல் பணியை செய்யவும் வாய்ப்பிருப்பதாக ஆரூடம் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version