இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஆவினில் குழந்தைகள் பணியமர்த்தியதை மூடி மறைக்கும் விடியா அரசு!

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க ஆவின் நிர்வாகம் செட்டில்மெண்ட் பேசியிருப்பது அம்பலமாகி உள்ள நிலையில், விடியா ஆட்சியில் பால்வளத்துறை என்றாலே பஞ்சாயத்துதானா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…

ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்கள் மூலம் பல லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட புகார் பூதாகரமாகி இருக்கும் நிலையில், குழந்தை தொழிலாளர் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது ஆவின் நிர்வாகம்.

குழந்தை தொழிலாளர்களை எந்த வேலைகளிலும் பணியமர்த்தக்கூடாது என்று சட்டம் சொல்லும் நிலையில், அதனை மீறி அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் 50க்கும் மேற்பட்ட சிறார்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தி இருக்கிறது.

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம், பால் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியில்தான் இந்த சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தினசரி 300 ரூபாய் ஊதியத்துக்கு வேலைக்கு வந்து சென்ற சிறுவர்களுக்கு சம்பளத்தை முழுவதுமாக தராமல் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றியதாகக் கூறி ஆவின் நிறுவனத்திற்கு முன் போராட்டத்தில் சிறுவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்போதுதான், ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது அம்பலமானது. ஆனால், ஆவின் அமைச்சர் மனோ தங்கராஜோ, சிறுவர்களா? அப்படி யாரும் வேலைக்கு வைக்கப்படவில்லை என்று ஊடகங்களிடம் மழுப்பல் காட்டி வருகிறார்.

கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும் என்பதால் ஒப்பந்ததாரர்கள் வழியாக சிறுவர்களை பணியில் எடுத்ததும், ஒப்பந்ததாரர்கள் குறைந்த அளவிலானாவர்களை வேலையில் வைத்துக் கொண்டு அதிகம் பேரை வைத்திருப்பதாகக் கூறி அரசிடம் பணம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பவர்கள், தற்போது இந்த விவகாரத்தை மூடி மறைக்க சிறுவர்களின் பெற்றோர்களிடம் செட்டில்மெண்ட் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஏற்கனவே ஆவினில் பல்வேறு சர்ச்சைகள் நிலவியதால்தான் துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு மனோ தங்கராஜ் ஆவின் அமைச்சரானார். ஆனாலும் பால்வளத்துறையில் பஞ்சாயத்துகள் தொடர்ந்து வருவதைப் பார்த்தால், விடியா அரசு ஆவினுக்கு பால் ஊற்றாமல் விடாதோ என்னும் சந்தேகம் கிளம்பியிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ஆவின் நிறுவன ஊழியர்கள்.

– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்

Exit mobile version